திருச்சியில் வினோதம் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப கடன் வசதி


திருச்சியில் வினோதம் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப கடன் வசதி
x
தினத்தந்தி 11 Oct 2018 10:15 PM GMT (Updated: 11 Oct 2018 9:55 PM GMT)

திருச்சியில் வாகனங்களுக்கு பெட்ரோல் - டீசல் நிரப்ப கடன் வழங்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி,

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. விலை உயர்வால் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறி விட்டது. சமீபத்தில் கூட புதுமண தம்பதிகளுக்கு பரிசாக 5 லிட்டர் பெட்ரோலை உறவினர் ஒருவர் வழங்கி வியப்பை ஏற்படுத்தினார்.அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுடன் சித்திரங்களும் வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் வாகனங்களுக்கு ஒரு தனியார் நிறுவனம் கடன் வழங்கும் நிகழ்ச்சியை திருச்சியில் நடத்தியது வினோதமாக இருந்தது.

திருச்சி காவிரி பாலம் அருகே ஓயாமரி பெட்ரோல் பங்க் அருகில் பெட்ரோல், டீசல் நிரப்ப வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஏன் இவ்வளவு கூட்டம்?, பந்த் ஏதேனும் நடக்கும் அறிவிப்பு வந்து விட்டதா? என சிலர் தங்களது வாகனங்களுடன் அருகில் சென்றனர்.

அப்போது தான், அங்கு தனியார் நிறுவனம் ஒன்று வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலுக்கான கடன் வழங்கும் முகாமை நடத்துவது தெரிந்தது.

பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டி ஒருவர்தனது காரில், அங்கிருந்த ஊழியரிடம் டீசல் நிரப்பி விட்டு ஏ.டி.எம். கார்டோ, பணமோ கொடுக்காமல் செல்போன் எண்ணை மட்டும் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒருமுறை பயன்படுத்தும் ‘ஓ.டி.பி.’ எண் வந்தது. அதை பதிவு செய்து கொண்டு தேவையான அளவுக்கு டீசல் நிரப்பி கொண்டு சென்றார். மேலும் ஒரு லிட்டர் டீசலுக்கு 85 பைசா சலுகையும் வழங்கப்பட்டது. டீசலுக்கான தொகை அவருக்கு கடனாக வழங்கப்பட்டது. அவர் பின்னர் அந்த தொகையை செலுத்தலாம்.

இதுகுறித்து எரிபொருட்களுக்கான கடன் வழங்கும் தனியார் நிறுவன அதிகாரி மீனாட்சி சுந்தரம் கூறுகையில், “இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல், டீசலுக்கான ரொக்கமில்லா பரிவர்த்தனை என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் பணமோ, ஏ.டி.எம். கார்டோ கொடுக்க வேண்டியதில்லை. செல்போன் எண்ணை கொடுத்தே தேவையான எரிபொருளை நிரப்பி கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு பின்னர் எவ்வளவு எரிபொருள் பயன்படுத்தி உள்ளார் என கணக்கிட்டு அதற்கேற்ப கடன் தொகையை செலுத்தி விட்டால், மீண்டும் கடன் சேவை தொடரும்.

மேலும் சலுகையாக டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 85 பைசா திரும்ப பெறும் வசதியும் உள்ளது. இன்று காலை முதல் மாலை வரை 400 வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது ” என்றார். வாகன கடன், கல்விக்கடன், தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் வரிசையில் தற்போது வாகன எரிபொருளுக்கும் கடன் வழங்குவது வியப்புக்குரியது.

Next Story