மணவாளக்குறிச்சி அருகே: 2 குழந்தைகளின் தாய் தற்கொலை வீடு கட்ட பணம் இல்லாததால் விபரீதம்


மணவாளக்குறிச்சி அருகே: 2 குழந்தைகளின் தாய் தற்கொலை வீடு கட்ட பணம் இல்லாததால் விபரீதம்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:15 PM GMT (Updated: 13 Oct 2018 12:19 AM GMT)

மணவாளக்குறிச்சி அருகே வீடு கட்ட பணம் இல்லாததால் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே மணவிளையை சேர்ந்தவர் சுபாஷ், தொழிலாளி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமிபாய் என்கிற ஷோபா (வயது 31). இவர்களுக்கு 8 வயதிலும், 6 வயதிலும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் தற்போது மணவிளை பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், கட்டுமான பணிகளை ஷோபா கவனித்து வந்தார். இந்தநிலையில், வீடு கட்ட போதிய பணம் இல்லாமல் அவதிபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், ஷோபா மனமுடைந்து காணப்பட்டார்.

கடந்த சில தினங்களாக ஷோபா தனது இரண்டு குழந்தைகளுடன், பொட்டக்குழியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஷோபா தூங்க செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றார்.

நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை திறந்து உள்ளே சென்ற போது, ஷோபாவின் பிணம் மின்விசிறியில் தொங்கி கொண்டிருந்தது. அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீடுகட்ட பணம் இல்லாததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story