தீபாவளிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டிட தொழிலாளர்கள் ஊர்வலம்– ஆர்ப்பாட்டம்


தீபாவளிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டிட தொழிலாளர்கள் ஊர்வலம்– ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2018 3:45 AM IST (Updated: 18 Oct 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கக்கோரி கட்டிட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படுகிற உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை கட்டிடகலை தொழிலாளர்கள் (ஏ.ஐ.டி.யு.சி.) வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி பெரியார் சிலை அருகே நேற்று காலை அவர்கள் கூடினார்கள். அங்கிருந்து கட்டிட தொழிலாளர்கள் சங்க தலைவர் விசுவநாதன், பொதுச்செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அதற்கு மேல் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கேயே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் அபிசேகம், தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஊர்வலம்–ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. பொருளாளர் ஜெயபாலன், செயலாளர் நளவேந்தன் மற்றும் நிர்வாகிகள் ஞானவேல், பாலன், அரசப்பன், கோட்டீஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story