திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட தடகள போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட தடகள போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:45 PM GMT (Updated: 23 Oct 2018 9:46 PM GMT)

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடந்த மாவட்ட தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருச்சி,

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு(எஸ்.எஸ்.பி.எப்) சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நேற்று நடந்தது. உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு, 16 வயதுக்குட்பட்டோர் பிரிவு மாணவ- மாணவிகளுக்கான 100 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 1000 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் ஆகியன நடத்தப்பட்டது. இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 21 பள்ளிகளை சேர்ந்த 375 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் பள்ளிகளுக்கிடையேயான 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் திருச்சி கேம்பியன் பள்ளி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. பெண்களுக்கான பிரிவில் மணப்பாறை சிறுமலர் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் திருச்சி காஜாமியான் பள்ளி அணியும், பெண்களுக்கான பிரிவில் மணப்பாறை சிறுமலர் பள்ளியும் சாம்பியன் ஆனது.

14 வயதுக்குட்பட்ட தனிநபருக்கான மாணவர் பிரிவில் திருச்சி கேம்பியன் பள்ளி மாணவர் ஜோன்ஸ் ஜோசு, மாணவிகளில் சிறுமலர் பள்ளியை சேர்ந்த ஜெனிபர், 16 வயதுக்குட்பட்ட தனிநபருக்கான மாணவர் பிரிவில் மான்போர்ட் பள்ளியை சேர்ந்த கலிலியோஆண்டனி, மாணவிகள் பிரிவில் சிறுமலர் பள்ளியை சேர்ந்த தனுஷா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மாலையில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் திருச்சி சேர்மன் செந்தூர் செல்வன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு செயலாளர் அண்ணாவி, கைப்பந்து கழக செயலாளர் கலைச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பபிரிவு) ஆனந்த்குமார், விளையாட்டு மேம்பாட்டு சங்க விடுதி மேலாளர் வேல்முருகன் மற்றும் போட்டி அமைப்பின் தலைவர் சேதுராமன், செயலாளர் பாக்கியலட்சுமி, அமைப்பாளர் உமாமகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story