காட்டு யானை தாக்கி பால் வியாபாரி பலி


காட்டு யானை தாக்கி பால் வியாபாரி பலி
x
தினத்தந்தி 24 Oct 2018 10:30 PM GMT (Updated: 24 Oct 2018 6:51 PM GMT)

கோவை அருகே காட்டு யானை தாக்கி பால் வியாபாரி பலியானார்.ஆவேசமாக திரியும் காட்டுயானையை காட்டுக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரூர்,

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் ரமேஷ்குமார் (வயது 35). இவர் வேனில் பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேனை நிறுத்திவிட்டு, வெள்ளருக்கம்பாளையம்–விராலியூர் ரோட்டில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். விராலியூர் அருகே வந்தபோது சாலையின் எதிர்புறம் திடீரென்று ஒரு யானை வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.ஆவேசமாக ஓடிவந்த யானை அவரை துதிக்கையால் தாக்கியது.கீழே விழுந்தவரை தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.தொடர்ந்து அவரது மோட்டார் சைக்கிளையும் மிதித்து சேதப்படுத்திய யானை பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று ரமேஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

உயிர் பலி வாங்கிய யானை தொடர்ந்து நரசிபுரம், விராலியூர் பகுதிகளில் சுற்றி திரிகிறது. அது ஆவேசத்துடன் காணப்படுவதால் அந்த பகுதியினர் பீதி அடைந்துள்ளனர். அது எப்போதும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையலாம் என்பதால் அச்ச உணர்வுடனே பொழுதை கழிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்த அவர்கள், அதை கும்கி யானை மூலம் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யானை தாக்கி ரமேஷ்குமார் இறந்தது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story