சென்னிமலை கோவிலுக்கு வந்த பக்தரை தாக்கி மோட்டார் சைக்கிள்– செல்போனை பறித்து சென்ற வாலிபர், போலீசார் விசாரணை


சென்னிமலை கோவிலுக்கு வந்த பக்தரை தாக்கி மோட்டார் சைக்கிள்– செல்போனை பறித்து சென்ற வாலிபர், போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 Oct 2018 11:31 PM GMT (Updated: 31 Oct 2018 11:31 PM GMT)

சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்த பக்தரை தாக்கி மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னிமலை,

ஈரோடு, மாணிக்கம்பாளையம், தென்றல் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது42). விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று பகல் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட மோட்டார்ச்கிளில் வந்தார். கோவில் அடிவாரத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு படிக்கட்டுகள் வழியாக சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு பிறகு மீண்டும் படிக்கட்டுகள் வழியாகவே கீழே வந்தார். படிக்கட்டுகள் வழியாக சென்று வந்ததால் களைப்படைந்த சரவணக்குமார் அடிவாரத்தில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் சரவணக்குமாரிடம் வலிய வந்து பேசி இருக்கிறார். தான் ஒரு கல்லூரி மாணவன் என்றும், திருச்செங்கோட்டை சேர்ந்தவன் என்றும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். அப்போது சரவணக்குமார் நான் ஈரோட்டில் இருந்து வந்து உள்ளேன் என்று அந்த வாலிபரிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு நானும் உங்களுடன் மோட்டார்சைக்கிளில் ஈரோடு வருகிறேன் என அந்த வாலிபர் கேட்டுக்கொண்டதால் அதற்கு சம்மதித்து சரவணக்குமார் அந்த வாலிபரை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

அவர்கள் இருவரும் சென்னிமலையில் தினசரி மார்க்கெட் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்து விட்டு சென்றுள்ளனர். வெள்ளோடு கீழ்பவானி வாய்க்கால் அருகே இருவரும் சென்று கொண்டிருந்த போது மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த அந்த வாலிபர், வண்டியை நிறுத்துங்கள், சிறுநீர் கழிக்க செல்ல வேண்டும் என கூறி இருக்கிறார். சரவணக்குமாரும் மோட்டார்சைக்கிளை நிறுத்தியிருக்கிறார். அப்போது அந்த வாலிபர் திடீரென சரவணக்குமாரை கீழே தள்ளிவிட்டார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சரவணக்குமாரிடம் செல்போனை பறித்துக்கொண்டு, மோட்டார்சைக்கிளையும் எடுத்துக்கொண்டு அந்த வாலிபர் மின்னல்வேகத்தில் சென்றுவிட்டார். அதன்பிறகு சரவணக்குமார் எழுந்து அந்த வழியே வந்தவர்களின் உதவியுடன் ஈரோடு வந்தா£ர்.

பின்னர் சரவணக்குமார் தனது நண்பர்களுடன் சென்னிமலை வந்து போலீசில் புகார் கொடுத்தார். சரவணக்குமாரும், அந்த வாலிபரும் சென்னிமலையில் உள்ள பேக்கரியில் டீ குடிக்க சென்ற போது அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் அந்த வாலிபரின் உருவம் நன்றாக பதிவாகியிருந்தது. அந்த வாலிபர் குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story