அரசு வேலை கிடைக்காததால் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை


அரசு வேலை கிடைக்காததால் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2018 3:15 AM IST (Updated: 9 Nov 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை கிடைக்காததால் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோத்தகிரி, 

குன்னூர் அருகே உள்ள கோடமலை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் என்பவரது மகன் சங்கரன் (வயது 37). இவர் கோத்தகிரி அருகே மசக்கல் கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி ரெமிலா (26).

சங்கரன் மெரைன் என்ஜினீயரிங் படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது செய்து வரும் பணி தனக்கு பிடிக்கவில்லை என்று தனது மனைவி மற்றும் நண்பர்களிடம் கூறிவந்துள்ளார். மேலும், தொடர்ந்து முயற்சி செய்தும் அரசு வேலை கிடைக்காததால் அவர் விரக்தியில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கரன் வழக்கம்போல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு யாருடனும் சரிவர பேசாமல் மனவேதனையுடன் இருந்துள்ளார். பின்னர் மதியம் 2 மணி அளவில் தேயிலை தொழிற்சாலையில் உள்ள மேலாளர் குடியிருப்புக்கு சங்கரன் சென்றார். அதன் பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி பணிக்கு வரவில்லை.

இதற்கிடையே குடியிருப்பில் சங்கரன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அரசு வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த சங்கரன் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மது அருந்தி இருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story