திருவள்ளூர் பஸ்நிலையத்தில் பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தாய் மாயம்


திருவள்ளூர் பஸ்நிலையத்தில் பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தாய் மாயம்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:45 PM GMT (Updated: 8 Nov 2018 7:32 PM GMT)

திருவள்ளூர் பஸ்நிலையத்தில் பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு மாயமான தாயை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் பஸ்நிலையத்தில் திருப்பாச்சூரை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 50) என்பவர் வேர்கடலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை 6 மணியளவில் கோவிந்தம்மாள் வழக்கம்போல வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தையுடன் பெண் ஒருவர் வந்தார். பஸ்நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்று வருவதாகவும், அதுவரை தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கோவிந்தம்மாளை கேட்டுள்ளார். அவரும் சம்மதித்தார். இதனையடுத்து குழந்தையை கோவிந்தம்மாளிடம் கொடுத்து விட்டு அந்த பெண் கழிவறைக்கு சென்றார்.

தாய் மாயம்

ஆனால் நீண்டநேரமாகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை. குழந்தையை தவிக்க விட்டுவிட்டு அவர் மாயமாகி விட்டார். குழந்தை பசியால் அழத்தொடங்கியது. சந்தேகம் அடைந்த கோவிந்தம்மாள் கழிவறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு அந்த பெண் இல்லை. இதுகுறித்து ரோந்துப்பணியில் ஈடுபட்ட திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே அவர் குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்ணை தேடி வருகிறார்கள்.

Next Story