தூத்துக்குடி அருகே மனைவியை அடித்துக் கொன்ற கொத்தனாரை பிடிக்க தனிப்படை தீவிரம்


தூத்துக்குடி அருகே மனைவியை அடித்துக் கொன்ற கொத்தனாரை பிடிக்க தனிப்படை தீவிரம்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:30 PM GMT (Updated: 9 Nov 2018 6:42 PM GMT)

தூத்துக்குடி அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கொத்தனாரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கொத்தனாரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெண் அடித்துக் கொலை

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). கொத்தனார். இவருடைய 2-வது மனைவி சாந்தி (47). சாந்தியின் முதல் கணவர் இறந்து 17 வருடங்கள் ஆகின்றன. சாந்தியின் முதல் கணவருக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். அதேபோல் பாலமுருகனின் முதல் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கணவன், மனைவிக்கு இடையே பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன், வீட்டில் இருந்த தோசை கரண்டியால் சாந்தியின் தலையில் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த சாந்தி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனிப்படை

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் பாலமுருகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில், தூத்துக்குடி நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தலைமறைவாக இருக்கும் பாலமுருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story