பொன்னூத்து அம்மன் கோவில் மலைப்பகுதியில் அட்டகாசம்: காட்டுயானைகளை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு


பொன்னூத்து அம்மன் கோவில் மலைப்பகுதியில் அட்டகாசம்: காட்டுயானைகளை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு
x
தினத்தந்தி 10 Nov 2018 3:30 AM IST (Updated: 10 Nov 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

பொன்னூத்து அம்மன் கோவில் மலைப்பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளது.

துடியலூர்,

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன. அவை, அவ்வப்போது பொன்னூத்து அம்மன் கோவில் மலை, ஆனைக்கட்டி, அனுவாவி சுப்பிர மணியசாமி மலைப்பகுதி வழியாக வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், தாளியூர், சோமையனூர், காளையனூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் புகுந்து வாழை, தென்னை, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாப்பநாயக்கன்பாளையத்தில் காட்டுயானைகள் புகுந்தன. இதை அறிந்த வனத்துறையின் விரைவு செயல்பாட்டு குழு (ஆர்.ஆர்.டி) பிரிவை சேர்ந்தவர்கள் சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யானை தாக்கி ஆர்.ஆர்.டி பிரிவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பலியானார். அதேபோல போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட பகுதியில் 43 வயதான ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் கும்கி யானைகளை கொண்டு வந்து காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வளர்ப்பு யானைகள் (கும்கி) விஜய், பொம்மன் ஆகியவற்றை சாடிவயல் முகாமுக்கு லாரியில் ஏற்றி அழைத்து கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் காட்டு யானைகளை விரட்டும் அளவிற்கு அந்த 2 கும்கியானைகளும் உடல் திறனுடன் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து வேறு 2 கும்கி யானைகளை அனுப்ப முடிவு செய்தனர்.

அதன்படி, கோவை வனச்சரகர் சுரேஷ்குமார், கவுரவ வனஉயிர் காப்பாளர் பத்ரிசாமி மற்றும் வனத் துறையினர் நேற்று மாலை முதுமலை வனக்காப்பகத்தில் இருந்து சேரன் (வயது 32), ஜான் (27) ஆகிய கும்கி யானைகளை பொன்னூத்து அம்மன் கோவில் மலைப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர், இயற்கை பாதுகாப்பு சங்கத்தினர், கோவை வன உயிர் இன பாதுகாப்பு சங்கத்தினர், ஓசை குழுவினர், விவசாயிகள் என 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் 50 பேர் உள்ளனர்.

கும்கியானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக் கை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக காட்டு யானைகளை விரட்ட வந்த கும்கி யானைகள் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதை அறிய வனத்துறை மருத்துவர் மனோகரன் பரிசோதனை செய்தார்.

அப்போது அந்த கும்கிகள், காட்டுயானைகளை விரட்டும் அளவிற்கு முழு உடல் திறனுடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

Next Story