மண்டபத்தில் அரசு பஸ்கள் ஊருக்குள் வராததால் பொதுமக்கள் அவதி
வேகத்தடை அமைக்கும் பணிகள் மந்தம் 1 வாரத்திற்கு மேலாக மண்டபத்தில் அரசு பேருந்துகள் ஊருக்குள் வராததால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பனைக்குளம்,
மண்டபம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் செல்லும் அரசு பஸ்களும், மதுரை,திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் மண்டபம் ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மண்டபம் ஊருக்குள் செல்லும் சாலையின் வளைவு பகுதியில் விபத்தை தடுக்க நெடுஞ்சாலை துறையின் மூலம் வேகத்தடை அமைக்க கடந்த 1 வாரத்திற்கு முன்பு மண்டபம் ஊருக்குள் செல்ல அனைத்து அரசு பஸ்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது. 1 வாரத்திற்கு மேலாகியும் வேகத்தடை அமைக்கும் பணியோ மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
இதனால் அரசு பஸ்கள் மண்டபம் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வதால் பொதுமக்கள்,பெண்கள், வயதானவர்கள் மண்டபம் ஊருக்குள் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிஅடைந்து வருகின்றனர்.
எனவே மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வேகத்தடை பணியை விரைந்து முடித்து வழக்கம்போல் அனைத்து அரசு பஸ்களும் மண்டபம் ஊருக்குள் வந்து செல்ல நெடுஞ்சாலை துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தர விட வேண்டும் என்று மண்டபம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.