அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக கார் டிரைவர் மர்மச்சாவு பணம், செல்போன் திருட்டு


அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக கார் டிரைவர் மர்மச்சாவு பணம், செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 11 Nov 2018 10:30 PM GMT (Updated: 11 Nov 2018 4:10 PM GMT)

வேலூரில், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலக கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டுள்ளது.

வேலூர், 

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 40). இவர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு பகவதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நாகராஜனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நாகராஜன் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியில் சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அவரை இரவில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ என வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் வேலூர் பாகாயம் அருகே உள்ள எழில்நகர் பகுதியில் மாட்டுவண்டிக்கு அடியில் நாகராஜன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

தகவல் அறிந்த பாகாயம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு பிணமாக கிடந்த நாகராஜனின் உடலை பார்த்தபோது அவருடைய உடலில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜன் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றபோது ரூ.4 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று இறந்து கிடந்த அவருடைய சட்டை பாக்கெட்டில் பணமோ, செல்போனோ இல்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

எனவே நாகராஜனை கொலைசெய்து விட்டு அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை எடுத்துச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை யாரும் கொலை செய்தார்களா? அல்லது அவரது சாவுக்கு வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story