வேப்பூர் அருகே: ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க செயலாளர், பன்றிக்காய்ச்சலுக்கு பலி
வேப்பூர் அருகே ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க செயலாளர், பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார்.
வேப்பூர்,
கடலூர் மாவட்டத்தில் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுநாள் வரை பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 60). இவர், சேப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் வேப்பூர் மற்றும் விருத்தாசலம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து அவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். பன்றிக்காய்ச்சலுக்கு பாண்டியன் இறந்துள்ளதால் அந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story