வாடிப்பட்டியில் ஓடும் பஸ்சில் வலிப்பு ஏற்பட்ட வாலிபர் பரிதாப சாவு
வாடிப்பட்டியில் ஓடும் பஸ்சில் வலிப்பு ஏற்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்துபோனார்.
வாடிப்பட்டி,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானபட்டியை சேர்ந்தவர் சையது இப்ராகிம். இவருடைய மகன் அன்வர்பாட்ஷா(வயது 20). இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியில் இருந்து அரசு பஸ்சில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அந்த பஸ்சில் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் என்ற இடத்தில் பஸ் வந்த போது அன்வர்பாட்ஷாவுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே என்னசெய்வது என்று தெரியாததால் பஸ் டிரைவரும், நடத்துனரும் வாடிப்பட்டி பஸ் நிலையத்திற்கு வந்தபோது பஸ்சில் இருந்து அன்வர்பாட்ஷாவை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
இதனால் பஸ் நிலையத்தில் கொளுத்தும் வெயிலில் வலிப்பு வந்தபடி அவதிப்பட்டு வந்துள்ளார். ஆனால் யாரும் கண்டு கொள்ளாததால் சிறிது நேரத்தில் அன்வர் பாட்ஷா மயக்கமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அன்வர் பாட்ஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுதொடர்பாக வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.