மூங்கில்துறைப்பட்டு அருகே: இறந்த குட்டியை பிரியாமல் தூக்கிச்செல்லும் தாய் குரங்கு - பொதுமக்கள் நெகிழ்ச்சி


மூங்கில்துறைப்பட்டு அருகே: இறந்த குட்டியை பிரியாமல் தூக்கிச்செல்லும் தாய் குரங்கு - பொதுமக்கள் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 12 Nov 2018 3:30 AM IST (Updated: 12 Nov 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே இறந்த குட்டியை பிரியாமல், அதை எங்கு சென்றாலும் தன்னுடனே தாய் குரங்கு தூக்கிச்சென்று வருகிறது. இதை பொதுமக்கள் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்துக்கு நேற்று மாலை கூட்டம், கூட்டமாக குரங்குகள் வந்தன. அதில் தாய் குரங்கு ஒன்று இறந்த தன்னுடைய குட்டியை பிரியாமல் அங்கும், இங்குமாக தூக்கிக்கொண்டு சுற்றித்திரிந்தது. அந்த குட்டி இறந்து ஒருவாரம் இருக்கும். அது தெரியாமல் தாய் குரங்கு அதை தட்டி, தட்டி எழுப்புகிறது.

ஆனால் அந்த குட்டி அசைவின்றி கிடக்கிறது. இதை பார்த்த தாய் குரங்கு சிறிது நேரம் அங்கேயே சோகத்துடன் அமர்ந்து இருந்தது. மற்ற குரங்குகளும் குட்டி குரங்குக்கு முன்பு அமர்ந்து சோகத்துடன் பார்த்தன. பின்னர் இறந்த குட்டியை தாய் குரங்கு தூக்கியபடியே ஊருக்குள் சென்றது. ஆனால் குட்டி குரங்கின் அருகில் ஆட்களை நெருங்க தாய் குரங்கு விடவில்லை.

இப்படியே எங்கு சென்றாலும் இறந்த குட்டி குரங்கை தாய் குரங்கு தூக்கி செல்வதை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரத்திலேயே குழந்தைகளை குப்பை தொட்டியிலும், முட்புதர்களிலும் தூக்கி வீசும் கல்நெஞ்சு படைத்த சில தாய்மார்கள் இருக்கிற இந்த காலத்தில் 5 அறிவு படைத்த குரங்கு, இறந்த தன்னுடைய குட்டியை பிரியாமல் இருப்பது காண்போரை நெகிழ வைத்தது.  

Next Story