திருவான்மியூரில் பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டு ரூ.4 லட்சம் கொள்ளை 2 ‘டிப்-டாப்’ ஆசாமிகளுக்கு வலைவீச்சு
திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டு ரூ.4 லட்சம் கொள்ளையடித்துச்சென்ற ‘டிப்-டாப்’ ஆசாமிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அடையாறு,
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது 49). நேற்று முன்தினம் இரவு கோவிந்தம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, ‘டிப்-டாப்’ உடையணிந்த 2 மர்ம ஆசாமிகள், அவரது வீட்டுக்கு வந்து கோவிந்தம்மாளிடம், “நாங்கள் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து வருகிறோம்” என்று கூறி, அவரது கணவர் குறித்து அவரிடம் பேச்சு கொடுத்தனர்.
அந்த ஆசாமிகள் திடீரென தங்களிடம் இருந்த கத்தியை காட்டி கோவிந்தம்மாளை சத்தம் போடக்கூடாது என மிரட்டினர். பின்னர் கோவிந்தம்மாளின் கை மற்றும் கால்களை கயிறால் கட்டினர். அதன்பிறகு வீட்டில் பீரோவில் இருந்த ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
மர்மநபர்கள் சென்றபிறகு கோவிந்தம்மாள் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரது கை, கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவரை மீட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற ‘டிப்-டாப்’ ஆசாமிகள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டில் பணம் இருப்பதையும், கோவிந்தம்மாள் தனியாக இருப்பதையும் அறிந்துகொண்டு மர்மநபர்கள், இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள், இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story