கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரும் பணி 2 நாட்களில் முடிவடையும் - கவர்னர் கிரண்பெடி தகவல்


கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரும் பணி 2 நாட்களில் முடிவடையும் - கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2018 11:15 PM GMT (Updated: 11 Nov 2018 8:30 PM GMT)

கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரும் பணி இன்னும் 2 நாட்களில் முடிவடையும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார கவர்னர் கிரண்பெடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். பொதுநல அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் பேசி அவர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வாய்க்கால்களை தூர்வாரும் பணியை கடந்த ஒரு மாதமாக கவர்னர் மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக கிராம பகுதியில் கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் நகர பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது. கூட்டத்திற்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

புதுவையில் வருகிற 13–ந் தேதி முதல் (நாளை) 2 நாட்கள் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதுச்சேரியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி இன்னும் 2 நாட்களில் முடிவடையும். இன்னும் பாலாஜி வாய்க்கால் மட்டுமே தூர்வாரப்பட வேண்டியுள்ளது. கடை உரிமையாளர்கள் தங்களது குப்பைகளை வாய்க்கால்களில்போட தடை விதிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை வாய்க்கால்களில் வீசுபவர்கள் குறித்த தகவல்களை தூய்மைப் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு வீசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

விதிமுறைகளை மீறும் குடியிருப்பு பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் கேபிள் சேனல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒலிபெருக்கி மூலமாகவும் வீதிகளில் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை, நகராட்சி மூலம் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறும் இடங்களில் அது தொடர்பான விவரங்கள் கொண்ட தகவல் பலகைகளை வைக்கவும், அந்த திட்டங்களுக்கு நிதி வழங்கியவர்களின் பெயர்களையும் அதில் எழுதி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story