நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் வாங்கிய பா.ஜ.க. முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி கைது


நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் வாங்கிய பா.ஜ.க. முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி கைது
x
தினத்தந்தி 11 Nov 2018 11:30 PM GMT (Updated: 11 Nov 2018 8:57 PM GMT)

நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்கம் வாங்கிய வழக்கில் பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

அமலாக்கத்துறையில் உள்ள வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்கம் வாங்கிய வழக்கில் பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்பு அவர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னாள் மந்திரி

பா.ஜனதாவை சேர்ந்த இவர் முன்னாள் மந்திரி ஆவார். பல்லாரியில் கனிமசுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்திருந்தனர். 4 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த அவர் கடந்த ஆண்டு தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை பெற்ற வழக்கில் ஜனார்த்தன ரெட்டியை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

ரூ.600 கோடி மோசடி

பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து, அதனை திரும்ப கொடுக்காமல் ரூ.600 கோடி வரை மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் நிதி நிறுவன அதிபர் பரீத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த மோசடி தொடர்பாக பரீத்திற்கு சொந்தமான நிதி நிறுவனம் மற்றும் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். இதுதொடர்பாகவும் பரீத் மீது அமலாக்கத் துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு, குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் பரீத்தை கைது செய்தார்கள். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். முன்னதாக இந்த வழக்கு குறித்து பரீத்திடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அப்போது பரீத் மீது அமலாக்கத்துறையில் பதிவாகி உள்ள வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரியான ஜனார்த்தனரெட்டி ரூ.20 கோடி பேரம் பேசியதும், இதற்காக ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றதும் தெரியவந்தது. மேலும் ரூ.2 கோடியும் இடைத்தரகர்கள் மற்றும் சிலருக்கு கைமாறி இருந்தது.

நோட்டீசு

அதாவது பரீத் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.18 கோடியை பெங்களூருவில் உள்ள அம்பிகா நகைக்கடையின் அதிபர் ரமேஷ் கட்டாரியாவுக்கு அனுப்பினார். அவர் அந்த பணத்தை பல்லாரி மாவட்டத்தில் நகைக்கடை நடத்தும் ரமேஷ் என்பவருக்கு கொடுத்தார். ரமேஷ் தனது நகைக்கடையில் இருந்து 57 கிேலா தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகானிடம் கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜனார்த்தனரெட்டி, நகைக்கடை அதிபர்கள் ரமேஷ் கட்டாரியா, ரமேஷ், அலிகான் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் பல்லாரி நகைக்கடை அதிபர் ரமேஷ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். அதுபோல் இந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகானும் கோர்ட்டில் இடைக்கால முன்ஜாமீன் பெற்றார். பெங்களூரு அம்பிகா நகைக்கடையின் அதிபர் ரமேஷ் கட்டாரியாவிடம் விசாரணை மட்டும் நடத்தப்பட்டது. இதனால் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஆனால் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த வழக்கில் 11-ந் தேதி (அதாவது நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த 9-ந் தேதி ஜனார்த்தனரெட்டிக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பினார்கள்.

நள்ளிரவு 2 மணிவரை...

இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென்று போலீஸ் விசாரணைக்கு ஜனார்த்தனரெட்டி ஆஜரானார். அதாவது நேற்று தான் போலீசார் விசாரணைக்கு ஜனார்த்தனரெட்டி ஆஜராக கோரி போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். ஆனால் ஒரு நாளுக்கு முன்னதாகவே அவர் விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் நேற்று முன்தினம் மாலை 4.15 மணியளவில் இருந்து நள்ளிரவு 2 மணிவரை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார், துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ், உதவி போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் பிரசன்னா ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் நிதி நிறுவன அதிபர் பரீத், ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகானிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

3 பேரிடமும் ஒரே நேரத்தில் போலீசார் விசாரணை நடத்தி, அதனை வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். விசாரணை முடிந்ததும் பரீத்தை மட்டும் போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜனார்த்தனரெட்டியும், அலிகானும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். இதனால் ஜனார்த்தனரெட்டி, அங்கேயே படுத்து தூங்கினார்.

ஜனார்த்தனரெட்டி கைது

இந்த நிலையில், நேற்று காலையில் ஜனார்த்தனரெட்டி, பரீத், அலிகான் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. ஆனால் இந்த வழக்கில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், பணமோ, தங்க கட்டிகளையோ தான் வாங்கவில்லை என்றும் ஜனார்த்தனரெட்டி போலீசாரிடம் கூறினார். ஆனால் பரீத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜனார்த்தனரெட்டி ரூ.20 கோடிக்கு பேரம் பேசியதும், அதற்காக முதலில் ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை பெற்றதும் தெரியவந்தது.

ஜனார்த்தனரெட்டிக்கு எதிராக முக்கிய சாட்சிகள் மற்றும் உறுதியான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்ததாலும், அவர் தங்க கட்டிகளை வாங்கியது உறுதியானதும், நேற்று மதியம் குற்றப்பிரிவு போலீசார் ஜனார்த்தனரெட்டியை கைது செய்தார்கள். இந்த தகவலை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமாரும் உறுதி செய்தார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.20 கோடியை மீட்க நடவடிக்கை

நிதி நிறுவனம் நடத்தி சையத் அகமது பரீத் ரூ.600 கோடி மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க ஜனார்த்தனரெட்டியின் உதவியை அவர் நாடியுள்ளார். அவர்களுக்குள் ரூ.20 கோடிக்கு பேரம் நடந்ததுடன், பணம் கைமாறியுள்ளது. ஜனார்த்தனரெட்டியிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது சில முக்கிய சாட்சிகள், ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனார்த்தனரெட்டி வாங்கிய பணம் பரீத்திற்கு சொந்தமானது அல்ல. அவர் பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி ரூ.600 கோடி மோசடி செய்துள்ளார்.

அந்த மோசடியில் இருந்து தப்பிக்க, பொதுமக்களிடம் இருந்து முதலீடாக பெற்ற ரூ.20 கோடி தான் கைமாறி இருக்கிறது. அதனால் ரூ.20 கோடியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பணம் கிடைத்ததும் பரீத் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்களுக்கு திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கைதாகி உள்ள ஜனார்த்தனரெட்டியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து, விக்டோரியா ஆஸ்பத்திரியில் ஜனார்த்தனரெட்டிக்கு மருத்துவபரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் கோரமங்களாவில் உள்ள நீதிபதி ஜெகதீஷ் வீட்டில் ஜனார்த்தனரெட்டியை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது போலீஸ் தரப்பில் ஜனார்த்தனரெட்டியிடம் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டியது இருப்பதால் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.

அதே நேரத்தில் ஜனார்த்தனரெட்டி சார்பில் ஆஜரான வக்கீல் சந்திரசேகர், ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜாமீன் மனுவும் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் ஜனார்த்தனரெட்டியை வருகிற 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஜனார்த்தனரெட்டி அடைக்கப்பட்டார்.

பரபரப்பு

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் பெற்ற வழக்கில் ஏற்கனவே பெங்களூரு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி ஜனார்த்தனரெட்டி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அந்த மனுவுடன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் இன்று ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் கிடைத்தால் சிறையில் இருந்து அவர் வெளியே வர வாய்ப்புள்ளது. என்றாலும், விசாரணைக்கு ஆஜராக சென்ற ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story