வல்லத்தில் ரூ.34½ கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்


வல்லத்தில் ரூ.34½ கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:45 PM GMT (Updated: 11 Nov 2018 10:03 PM GMT)

தஞ்சையை அடுத்த வல்லத்தில் ரூ.34½ கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வல்லம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.34 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ் வல்லம் பேரூராட்சி முழுவதும் 7 மண்டலமாக பிரிக்கப்பட்டு முதல்கட்டமாக 1, 4, 6 மற்றும் 7 மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் தொடக்க விழா வல்லம் பஸ் நிலையத்தில் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. பாதாள சாக்கடை திட்டத்தை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடக்கி வைத்தார்.

முன்னதாக விழாவில் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சுற்றுச்சூழலை காக்க ரூ.34½ கோடியில் வல்லம் பேரூராட்சியில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல நகராட்சிகளில் இன்னும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படாத நிலையில் வல்லம் பேரூராட்சிக்கு இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வல்லம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கு.பரசுராமன் எம்.பி., மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆர்.காந்தி, வல்லம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சிங்.ஜெகதீசன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சரவணன், சிங்.ஜெ.முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் விஸ்வநாதன் வரவேற்றார். முடிவில் தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குற்றாலிங்கம் நன்றி கூறினார்.


Next Story