சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 126 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 126 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Nov 2018 10:14 PM GMT (Updated: 17 Nov 2018 10:14 PM GMT)

கோவையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 126 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

கணபதி,

கோவை மாநகராட்சி 41–வது வார்டு மேட்டுப்பாளையம் சாலை– சத்தி சாலையை இணைக்கும் ரவீந்திரநாத் தாகூர் சாலையின் மொத்த நீளம் 5 கிலோ மீட்டர். அதில் கணபதி பகுதியில் ரவீந்திரநாத் தாகூர் சாலையின் 2 பக்கமும் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதையடுத்து சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 107 வீடுகள், 2 கோவில்கள், ஒரு அரசியல் கட்சி மன்றம் ஆகியவை நேற்று பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட் டன.

இதே போல கணபதி மணியகாரம்பாளையம் பாரதியார் சாலை முல்லை நகர் பகுதியில் கணபதி பள்ளம் என்ற குளத்தை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த 19 வீடுகளும் நேற்று இடிக் கப்பட்டன. கோவை மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் நேற்று மொத்தம் 126 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

இது குறித்து கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கூறியதாவது:–

ரவீந்திரநாத் தாகூர் சாலை முன்பு 30 அடி அகலம் இருந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் அந்த சாலையின் அகலம் சராசரியாக 60 அடியாக உள்ளது. தற்போது 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. சத்தி சாலையையும், மேட்டுப்பாளையம் சாலையையும் இணைக்கும் அந்த முக்கிய சாலையில் மீதி உள்ள ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து அகற்றப்படும்.

இதேபோல குறிச்சிகுளம் அருகிலும், வாலாங்குளம் பாலத்துக்கு வடக்கே உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும். கோவை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 24 இடங்களில் 3,500 வீடுகள் ஆக் கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. அவை படிப்படியாக அகற்றப்படும்.

கோவை வி.கே.கே.மேனன் சாலை, சீரநாயக்கன்பாளையம், மணியகாரன்பாளையம் பாரதியார் சாலை, ரவீந்திரநாத் தாகூர் சாலையில் இடிக்கப்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story