சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு கோரி வழக்கு; தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி, புதுக்கோட்டை செல்லும் வாகனங்களுக்கு சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த வக்கீல் அருண்சுவாமிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக திருச்சி வரையிலான சாலையை தேசிய நெடுஞ்சாலை 45 ‘பி’ என அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் மதுரை மாவட்டம் சிட்டம்பட்டியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கிருந்து துவரங்குறிச்சி பூதக்குடி சுங்கச்சாவடி வரை மொத்தம் 92 கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு ரூ.80 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து இந்த சுங்கச்சாவடி வழியாக மேலூர், திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களுக்கும் ரூ.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஊர்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு கடந்த 2013–ம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் தற்போது வரை இந்த உத்தரவை சுங்கச்சாவடியில் கடைபிடிக்கப்படவில்லை. முழு கட்டணம் வசூலிக்கின்றனர். காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மதுரைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் மதுரைக்கு வருவதற்கு இந்த தேசிய நெடுஞ்சாலையை தவிர வேறு வழியில்லை.
எனவே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி வழியாக திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் ‘‘இந்த மனு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வருகிற 26–ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் 27–ந்தேதி அன்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.