ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.6½ லட்சம் மோசடி போலீசார் விசாரணை


ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.6½ லட்சம் மோசடி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Nov 2018 10:30 PM GMT (Updated: 21 Nov 2018 7:52 PM GMT)

ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம், 

கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்தவர் கிரிஷ் (வயது 38), தொழில் அதிபர். இவர் புதியதாக தொழில் தொடங்குவதற்காக கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது நண்பர் ஒருவர் மூலம் ஹரிகிருஷ்ணன் என்பவரை தொடர்பு கொண்டார்.

அப்போது அவர், வீடு அடமான கடனாக ரூ.3 கோடி வாங்கி தருவதாகவும், இதற்கான பத்திரப்பதிவு செலவாக ரூ.6 லட்சத்து 48 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்றும் கிரிஷிடம் தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஹரிகிருஷ்ணன், அவரை தொடர்பு கொண்டு சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பணம் வாங்க வருமாறு கூறினார்.

அதை நம்பி கிரிஷ் தனது மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது ஹரிகிருஷ்ணன் நண்பர்கள் 2 பேருடன் அங்கு வந்தார். பின்னர் அவர்களிடம் கிரிஷ் தரப்பினர் பணத்தை கேட்டனர். இதற்கு அவர்கள் அவ்வளவு பணத்தை இங்கு வைத்து எண்ண முடியாது என்பதால் உங்கள் சொந்த ஊரான சிமோகாவிற்கு வந்து தருகிறேன் என்றனர்.

மேலும் அவர்கள், கிரிஷிடம் இருந்து பத்திரப்பதிவு செலவிற்காக ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்தை பெற்று கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர். இதையடுத்து ஹரிகிருஷ்ணன் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, பணம் தருகிறேன் என்று கூறி காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையில் ஹரிகிருஷ்ணன் உள்பட சிலர் கிரிசுக்கு தொடர்பு கொண்டு பணம் தரமுடியாது என்று கூறியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இந்த மோசடி குறித்து கிரிஷ் சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே இதேபோல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை மதுரையில் போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலின் தலைவனில் புகைப்படத்தை கிரிஷிடம் போலீசார் காண்பித்தனர். அப்போது இவர்தான் தனது பணத்தை மோசடி செய்து விட்டதாக அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஹரிகிருஷ்ணனின் உண்மையான பெயர் சுரேஷ்குமார் என்பதும், அவர் கோவையை சேர்ந்தவர் என்பதும், பலரிடம் இதுபோல் மோசடி செய்ததும் தெரியவந்தது. தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story