பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டம்: 11 பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு; 82 பேர் கைது
பா.ஜ.க. சார்பில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி 11 அரசு மற்றும் தனியார் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மறியலில் ஈடுபட்ட சாமிநாதன் எம்.எல்.ஏ. உள்பட 82 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தை கண்டித்து புதுவையில் நேற்று பா.ஜ.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி புதுவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. புதுவை, தமிழக அரசு பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவில் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அருகே சென்ற தமிழக அரசு பஸ் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அந்த பஸ்சின் கண்ணாடி உடைந்தது.
இது பற்றிய தகவல் அறிந்து லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று பஸ் கண்ணாடியை உடைத்ததாக பா.ஜ.க.வைச் சேர்ந்த கோபி (வயது 45), சசிகுமார்(37), வேல்முருகன் (27), ராக் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தவளக்குப்பம் சந்திப்பில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் கூடியிருந்த பா.ஜ.க.வை சேர்ந்த சக்திபாலன்(40), சுகுமாறன் (32), வடிவேல் (39) அய்யனார்(25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை, ராஜீவ்காந்தி சிக்னல், நெல்லித்தோப்பு, கிழக்கு கடற்கரை சாலை, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம், காட்டேரிகுப்பம், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் 11 அரசு மற்றும் தனியார் பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 9 மினி லாரியின் கண்ணாடிகள், ஒரு ஆம்னி பஸ், ஒரு ஆட்டோவின் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுவை லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் நேற்று காலை வழக்கம் போல் கடைகள் திறந்து இருந்தன. இந்தநிலையில் பாஜ.க.வை சேர்ந்த சந்துரு தலைமையில் சிலர் அங்கு சென்று கடைகளை அடைக்கும்படி வலியுறுத்தினர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சந்துரு உள்பட 7 பேரை கைது செய்தனர்.
இந்திராகாந்தி சிலை அருகே உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மதியம் பா.ஜ.க.வினர் ஒன்று கூடினர். அங்கிருந்து சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் இந்திராகாந்தி சிலை அருகே சாலை மறியல் செய்ய புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாரின் தடுப்பை மீறி ஓடிச்சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி, கேரள அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கைது செய்ய சென்ற போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இதில் 20 பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ரெட்டியார்பாளையம் அருகே சென்ற போது 2 பேர் மோட்டார் சைக்கிள்களை வழியில் நிறுத்தி போலீஸ் வேனை மறித்து போராட்டம் நடத்தினர். அவர்களையும் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.