சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை


சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
x
தினத்தந்தி 30 Nov 2018 10:30 PM GMT (Updated: 30 Nov 2018 6:51 PM GMT)

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இந்திய அளவில் சுற்றுலா பயணிகள் அதிகம் கண்டு களிக்கும் இடங்களாக ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் முதல் இடத்திலும், மாமல்லபுரம் கடற்கரை கோவில் 2-வது இடத்திலும் உள்ளது.

அதனால் மத்திய தொல்லியல் துறையும், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை மிகவும் கவனமாக பாதுகாத்து பராமரித்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை உப்புக்காற்று அரிக்காத வண்ணம் ரசாயன கலவை பூசப்பட்டு பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது சுற்றுச்சூழல் மாசு காரணமாக புராதன சின்னங்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வரும் காரணத்தால் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் இனி பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள் பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

இதுகுறித்து மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி (பொறுப்பு) மகேஸ்வரன் தலைமையில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதர், துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மாமல்லபுரத்தில் உள்ள கடைகள் தோறும் சென்று பிளாஸ்டிக்பொருட்கள், கவர்கள் உள்ளிட்டவைகளை இன்று (சனிக்கிழமை) முதல் விற்கக்கூடாது என்று தெரிவித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Next Story