பழிக்கு பழியாக கொத்தனார் கொலை செய்யப்பட்டது அம்பலம்; மேலும் ஒரு பெண் கைது


பழிக்கு பழியாக கொத்தனார் கொலை செய்யப்பட்டது அம்பலம்; மேலும் ஒரு பெண் கைது
x
தினத்தந்தி 8 Dec 2018 10:30 PM GMT (Updated: 8 Dec 2018 8:11 PM GMT)

பழிக்கு பழியாக கொத்தனார் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ள பழையனூர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது புலவர்சேரி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 42). கொத்தனாரான இவர் கடந்த வியாழக்கிழமை நடுக்கநேந்தல் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போது, நடுக்கநேந்தலை சேர்ந்த விவசாயி சுப்பையா மகள் தனம் என்ற தனலட்சுமி திருப்பாச்சேத்தி போலீஸ்நிலையத்தில் சரணடைந்தார்.

அதைத்தொடர்ந்து பழையனூர் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக தனத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் தாயார் மரகதம் (65), உறவினர்கள் பால்ச்சாமி, முத்துவீரு, நாகு, செண்பகமூர்த்தி, ராம்குமார் ஆகியோர் சேர்ந்து, விவசாயி சுப்பையா இறப்பிற்கு காரணமான சக்தியை முன்விரோதம் காரணமாக பழிக்கு பழியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பழையனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி, தாய் மரகதத்தை கைது செய்தார். தொடர்ந்து தாய், மகள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.85 ஆயிரம், கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பால்ச்சாமி உள்ளிட்ட 5 பேரை பிடிக்க, போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு 5 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story