பெலகாவி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் மீண்டும் போராட்டம் நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி நடந்தது


பெலகாவி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் மீண்டும் போராட்டம் நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 10 Dec 2018 4:30 AM IST (Updated: 10 Dec 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவியில், நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு, 

பெலகாவியில், நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சமையல் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பெலகாவி, விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்புகளுக்கு நிலுவைத்தொகை கொடுக்காமல் உள்ளன. சர்க்கரை ஆலைகளின் அதிபர்களிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெலகாவி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெலகாவி சுவர்ணசவுதாவுக்குள் கரும்பு லாரிகளுடன் விவசாயிகள் நுழைந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் அதிபர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆலைகளின் அதிபர்களிடம் இருந்து நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமாரசாமி உறுதி அளித்தார். ஆனால் சர்க்கரை ஆலைகளின் அதிபர்கள், கரும்பு விவசாயிகளுக்கு இன்னும் நிலுவைத்தொகையை வழங்கவில்லை.

மீண்டும் போராட்டம்

இந்த நிலையில், நிலுவைத்தொகையை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெலகாவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மீண்டும் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அப்போது அவர்கள் சர்க்கரை ஆலைகளின் அதிபர்கள் மற்றும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பாக சமையல் செய்து சாப்பிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். பெலகாவி சுவர்ணசவுதாவில் இன்று(திங்கட்கிழமை) குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாய கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் பா.ஜனதா கட்சியினர் இன்று பெலகாவி சுவர்ணசவுதா முன்பு பிரமாண்ட ஊர்வலம் நடத்த உள்ளனர். மேலும் சட்டசபையிலும் விவசாயிகளின் பிரச்சினைகளை எழுப்ப பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர்.

Next Story