குஜிலியம்பாறை அருகே: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்


குஜிலியம்பாறை அருகே: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
x
தினத்தந்தி 10 Dec 2018 9:45 PM GMT (Updated: 10 Dec 2018 5:57 PM GMT)

குஜிலியம்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பாடி ஊராட்சி பிச்சனாம்பட்டியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு வசிக்கிற மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மின்மோட்டார் பொருத்தி, மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதடைந்து விட்டது. இதனை சரிசெய்வதற்காக, ஆலம்பாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின்மோட்டாரை எடுத்து சென்றனர். ஆனால் இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீரைத்தேடி அருகே உள்ள விவசாய கிணறுகளுக்கு செல்கின்றனர்.

மேலும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைராக்கியபுரம், காடமநாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். தங்களது காலனியில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து ஆலம்பாடி ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த காலனி பகுதியை சேர்ந்த பெண்கள், காளப்பட்டி சாலையில் காலிக்குடங் களுடன் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலம்பாடி ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். 

Next Story