அட்டகாசம் செய்து வரும்: யானைகளை விரட்டாவிட்டால் சென்னையில் முற்றுகை போராட்டம் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு


அட்டகாசம் செய்து வரும்: யானைகளை விரட்டாவிட்டால் சென்னையில் முற்றுகை போராட்டம் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 10 Dec 2018 10:15 PM GMT (Updated: 10 Dec 2018 8:17 PM GMT)

அட்டகாசம் செய்து வரும் யானைகளை விரட்டாவிட்டால் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை, 

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுத்தனர். அந்த மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை பெரியதடாகம் மற்றும் ஆனைக்கட்டி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சின்னத்தம்பி, விநாயகன் என்ற 2 காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து 4 கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும் அந்த காட்டு யானைகள் கும்கிகளுக்கு கட்டுப்படாமல் மீண்டும், மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த 2 காட்டு யானைகளையும் காலம் தாழ்த்தாமல் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும். இந்த காட்டு யானைகளை விரட்டாவிட்டால் வனத்துறையை கண்டித்து வருகிற 17-ந் தேதி சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மனு அளித்துவிட்டு வெளியே வந்த கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

காட்டு யானைகளை பிடிக்க யானை ஆர்வலர் அஜய் தேசாய் யானைகள் நடமாடும் பகுதியில் ஆய்வு செய்து 9-ந் தேதிக்குள் குறிப்பிட்ட 2 யானைகளையும் இடமாற்றம் செய்யப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இதுவரை இடமாற்றம் செய்யப்படவில்லை. விவசாயிகள் வியர்வையை சிந்தி வளர்க்கும் பயிர்களை ஒரே நேரத்தில் காட்டுயானைகள் துவம்சம் செய்துவிடுகின்றன.

இதனால் பேரிழப்பு ஏற்படுகிறது. அந்த 2 யானைகளையும் உடனடியாக பிடிக்க வேண்டும். இல்லையென்றால் சுட்டுக்கொல்ல வேண்டும். யானைகளை சுட்டுக்கொல்வது சட்டவிரோதம் என்று கூறுவார்கள். இதற்காக எங்களை கைது செய்தாலும் பரவாயில்லை. விவசாயத்தை இழக்க முடியாது. யானைகளை இடமாற்றம் செய்வதா? அல்லது சுட்டுக்கொல்வதா? என்பதை முடிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பன்றி வளர்ப்போர் மற்றும் இறைச்சிகடை வியாபாரிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் 100 பன்றி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. இந்த தொழிலை நம்பி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

அனைத்து பண்ணைகளிலும் பன்றிகள் முறையாக பராமரிக்கப்பட்டு கால்நடை மருத்துவரின் வழிகாட்டுதலின்படி வளர்க்கப்படுகின்றன. அதன் பின்னர் தான் அவை இறைச்சிகளாக விற்கப்படுகின்றன.

இந்தநிலையில், தற்போது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகளவு உள்ளதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசு சார்பில், எச்1என்1 பன்றிகாய்ச்சல் என விளம்பரப்படுத்துவதால் மக்கள் பீதியடைந்து வெள்ளை பன்றி இறைச்சி சாப்பிட தயங்குகிறார்கள். எனவே, அதனை பன்றிக்காய்ச்சல் என்று அழைப்பதற்கு பதிலாக எச்1என்1 என்றே அழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செல்வபுரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகதீசன் என்பவர் அளித்த மனுவில், சிலை கடத்தல் வழக்கை சிறப்பான முறையில் விசாரித்து வந்ததை தொடர்ந்து, ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு கோர்ட்டு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.

இதனை திரும்ப பெறவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story