பாளையங்கோட்டையில் 2–வது முறையாக விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு 7 ஆயிரம் இளைஞர்கள் ஒரே இடத்தில் கூடினார்கள்


பாளையங்கோட்டையில் 2–வது முறையாக விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு 7 ஆயிரம் இளைஞர்கள் ஒரே இடத்தில் கூடினார்கள்
x
தினத்தந்தி 13 Dec 2018 3:45 AM IST (Updated: 12 Dec 2018 7:26 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு நடந்தது. 7 ஆயிரம் இளைஞர்கள் ஒரே இடத்தில் கூடினார்கள்.

நெல்லை, 

பாளையங்கோட்டை விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு நடந்தது. 7 ஆயிரம் இளைஞர்கள் ஒரே இடத்தில் கூடினார்கள்.

விமானப்படை வீரர்கள் தேர்வு 

இந்திய விமானப்படையின் ஏர்மேன் குரூப் ‘ஒய்‘ தொழில்நுட்பம் இல்லாத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான தகுதி பிளஸ்–2 தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 1998–ம் ஆண்டு ஜூலை 14–ந்தேதிக்கு பிறகும், 2002–ம் ஆண்டு ஜூன் மாதம் 26–ந்தேதிக்குள்ளும் பிறந்து இருக்க வேண்டும். திருமணம் ஆகாத இளைஞர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 9–ந்தேதி தொடங்கியது. அதில் வேலூர், சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

2–வது கட்டமாக 

நேற்று 2–வது கட்டமாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், குமரி, அரியலூர், கடலூர், தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம், பெரம்பலூர், சேலம், நீலகிரி, தேனி, திருச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கும் தேர்வு நடந்தது.

இந்த தேர்வில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினமே இளைஞர்கள் நெல்லைக்கு வந்துவிட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்கள், பள்ளி, கலையரங்களிலும் படுத்து தூங்கினார்கள். அதிகாலை 2 மணிக்கே வ.உ.சி.மைதானம் முன்பு இளைஞர்கள் திரண்டனர். 3 மணி முதல் டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வரிசையாக மைதானத்திற்கு உள்ளே அனுமதித்தனர்.

7 ஆயிரம் இளைஞர்கள் உள்ளே சென்றால் மைதானம் முழுவதும் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. விமானப்படை கமாண்டிங் அதிகாரி சைலேஷ்குமார் தலைமையில் வந்து இருந்த விமானப்படை அதிகாரிகள், இளைஞர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். பின்னர் அவர்களின் உயரம், உடல் எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடங்கள் 45 வினாடிக்குள் கடக்க வேண்டும்.

 இந்த ஓட்டப்பந்தயம் பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தின் முன்பு இருந்து தொடங்கி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பாக உள்ள ரோட்டில் சென்று அங்குள்ள தெரு வழியாக தெற்கு பஜார் முத்தாரம்மன் கோவில் வழியாக லூர்துநாதன் சிலை வழியாக மீண்டும் வ.உ.சி.மைதானத்தை சென்றடையவேண்டும். இந்த வழிபாதை முழுவதும் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரோட்டின் ஓரத்தில் பாதுகாப்பு கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தன. ஒரு நேரத்திற்கு 400 இளைஞர்களை ஒன்று இணைந்து ஒரு குழுவாக ஓட விட்டனர்.

இந்த ஒட்டப்பந்தயம் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் வரை நடந்தது. 18 முறை இந்த ஒட்டப்பந்தயம் நடந்தது. இது தெருக்களிலும், மக்கள் நடமாட்டம் உள்ள சாலையிலும் நடந்ததால் அங்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதையொட்டி பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை பகுதியில் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. ஓட்டத்திற்கு முன்பு போலீஸ் வாகனமும், பின்னால் 108 ஆம்புலன்சும், நடமாடும் மருத்துவ குழு வாகனமும், போலீஸ் வாகனமும் வந்தது.

இந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சிட்டப்ஸ், புஷ்அப்ஸ், பென்ட் நீட் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பொதுஅறிவு எழுத்து தேர்வும், பின்னர் மனநல தேர்வும் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) சிறப்பு எழுத்து தேர்வு நடக்கிறது.

பலத்த பாதுகாப்பு 

தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற இளைஞர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தேர்வையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மைதானத்திற்குள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே கடந்த 9–ந்தேதி நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 54 பேருக்கும், தற்போது நடைபெறுகின்ற தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்து எடுக்கப்படுகின்ற இளைஞர்களுக்கும் ஜனவரி மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. 

Next Story