குட்டையில் தவறி விழுந்து குழந்தை சாவு டாக்டரிடம் தகராறு செய்தவர் மீது வழக்கு


குட்டையில் தவறி விழுந்து குழந்தை சாவு டாக்டரிடம் தகராறு செய்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Dec 2018 3:45 AM IST (Updated: 13 Dec 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே குட்டையில் தவறி விழுந்து குழந்தை இறந்தது. குழந்தையின் உடலை பரிசோதனை செய்யாமல் வழங்க கேட்டு டாக்டரிடம் தகராறு செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலகொருக்கையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. விவசாயி. இவருடைய மகன் யோகேஸ்வரன்(வயது2½). யோகேஸ்வரன் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது அருகே உள்ள தண்ணீர் குட்டையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். இதனால் உயிருக்கு போராடிய குழந்தையை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர், குழந்தை யோகேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

அப்போது பிரேத பரிசோதனை செய்யாமல் குழந்தையின் உடலை தங்களிடம் வழங்க கேட்டு அதே ஊரை சேர்ந்த மூர்த்தி(50) என்பவர் மருத்துவமனையில் பணியில் இருந்த உதவி டாக்டர் செல்வராணியிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் செல்வராணி திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story