பொங்கல் பண்டிகைக்காக அச்சுவெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்


பொங்கல் பண்டிகைக்காக அச்சுவெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:00 AM IST (Updated: 13 Dec 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகைக்காக அச்சுவெல்லம் தயாரிப்பு பணி தீவிரமடைந்து வருகின்றன.

போடிபட்டி,

அறுசுவைகளில் அனைவரையும் கவரும் சுவை என்றால் அது இனிப்பு சுவைதான். விருந்து, விசேஷங்களில் இனிப்பு பண்டங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆரம்ப காலத்தில் பெரும்பாலான இனிப்பு பண்டங்கள் கருப்பட்டி, வெல்லம் போன்ற ஆரோக்கியம் தரும் இனிப்பு வகைகளில் இருந்தே தயாரிக்கப்பட்டன. காலப்போக்கில் அந்த இடத்தை வெள்ளைச்சர்க்கரை என்ற சீனி ஆக்கிரமித்துக்கொண்டது.

ஆனாலும் இன்றளவும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக வெல்லமே உள்ளது. கோவில்களில் சர்க்கரைப் பொங்கலே பிரதான நைவேத்தியமாக உள்ளது. அதே நேரத்தில் அனைவரும் சர்க்கரைப் பொங்கல் செய்து வழிபாடு நடத்தும் ஒரு நாள் உண்டென்றால் அது தை மாதத்தின் முதல் நாளான பொங்கல் திருநாளாகும். அந்தநாளில் வெல்லத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இப்போதே அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கரும்பு அதிக அளவில் பயிரிட்டு வந்த நிலையில் ஏராளமான வெல்ல உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது கரும்பு சாகுபடி குறைந்துள்ள நிலையில் கர்நாடக மாநிலப்பகுதிகளில் இருந்தே கரும்பு கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் வேடப்பட்டி, குமரலிங்கம், போடிபட்டி போன்ற ஒரு சில பகுதிகளில் மட்டுமே தற்போது வெல்ல உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் பெரும்பாலும் அச்சு வெல்லம் உற்பத்தியிலேயே பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையிலும் அந்த வெல்லத்துக்கு போதிய விலை கிடைக்காத நிலையே உள்ளது.

இது குறித்து மடத்துக்குளத்தை அடுத்த வேடபட்டியை சேர்ந்த வெல்ல உற்பத்தியாளர் துர்க்கைவேல் கூறியதாவது:-

அச்சு வெல்லம் தயாரிப்புக்கென்று நல்ல தரமான கரும்புகளை தேர்ந்தெடுத்து மைசூருவில் இருந்து வாங்கி வருகிறோம். அங்கிருந்து கொண்டு வரப்படும் கரும்பு வாங்கும் விலை, போக்குவரத்துச்செலவு என டன்னுக்கு ரூ.3,700 அசலாகிறது. அதற்கான வெல்ல உற்பத்திச்செலவு ஒரு டன்னுக்கு ரூ.700 வரை ஆகிறது. மேலும் ஒரு டன் கரும்பில் இருந்து 100 முதல் 120 கிலோ அச்சுவெல்லம் உற்பத்தி செய்ய முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு முன்பு வரை 30 கிலோ கொண்ட அச்சுவெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரை விற்பனையாகிறது.

ஆனால் வெள்ளத்துக்கு பிறகு 30 கிலோ அச்சு வெல்லம் ரூ.1,100-க்கே விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகைக்கு சுமார் 50 நாட்களுக்கு முன்பு இருந்தே அச்சுவெல்லம் படிப்படியாக விலை உயரத்தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டில் இதுவரை விலை உயரவில்லை. இனியும் விலை உயர்வதாகத் தெரியவில்லை. ஏனெனில் திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்தும் நெய்க்காரப்பட்டி வெல்லச்சந்தைக்கு அதிக அளவில் அச்சு வெல்லம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் அச்சுவெல்லம் கொண்டு செல்லப்படவில்லை.

எனவே அச்சுவெல்லம் விலை உயராததால் நஷ்டத்தையே சந்திக்கும் நிலை உள்ளது. ஆனால் வெளியூர்களில் இருந்து அழைத்து வந்து தங்கவைத்துள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அச்சுவெல்ல தயாரிப்பு தொழில் தெரிந்த தொழிலாளர்கள் கிடைப்பது சிரமமாகிவிடும். எனவே வேறு வழியின்றி தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவரிடம் அச்சுவெல்லத் தயாரிப்பு முறை குறித்து கேட்ட போது, நன்கு தரமான கரும்புகளை எந்திரத்திலிட்டு சாறு பிழிகிறோம். அவ்வாறு பிழியப்பட்ட கரும்புச்சாறை சுத்தமாக வடிகட்டி பெரிய அளவிலான கொப்பரையில் ஊற்றுகிறோம். பின்னர் கரும்புச்சாறை சுமார் 200 டிகிரி வெப்பத்தில் கொதிக்கவைக்கிறோம். சுமார் 2½ மணி நேரம் தொடர்ச்சியாக சூடுபடுத்தப்படும்போது கரும்புச்சாறில் இருந்து தண்ணீர் ஆவியாகி பாகுபதத்துக்கு வருகிறது.

சரியான பதம் வந்ததும் மரத்தாலான தொட்டியில் ஊற்றி தொடர்ச்சியாக கிளற வேண்டும். பின்னர் சர்க்கரை பாகை மரத்தாலான அச்சுகளில் ஊற்ற வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து அச்சுகளை தலைகீழாக திருப்பித்தட்டினால் அச்சு வெல்லம் தயாராகி விடும். பின்னர் அச்சுவெல்லங்களை 30 கிலோ கொண்ட சிப்பங்களாகக் கட்டி திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறோம் என்றார்.

இளமைப்பருவம் முதல் முதுமைப்பருவம் வரை தொடரும் ஆசைகளில் இனிப்பு சுவைப்பது ஒன்றாகும். அந்த இனிப்பை ஆரோக்கியமானதாக்க வெல்லம், பனங்கருப்பட்டி போன்ற இனிப்புகளை உபயோகிக்க அனைவரும் முன்வர வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கை மட்டுமின்றி வெல்ல தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர்களின் வாழ்வும் இனிப்பாக இருக்கும்.

ரேஷன் கடையில் அச்சுவெல்லம் வழங்க வேண்டும்

வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனியின் பயன்பாட்டை குறைக்க பல மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக அச்சுவெல்லம் வழங்க முன்வரவேண்டும். இதன் மூலம் வெல்ல உற்பத்தியாளர்களுக்கு சீரான விலை கிடைக்கும். மேலும் கடந்த ஆண்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப்பொருட்களில் வெல்லத்துக்கு பதிலாக வெள்ளைச்சர்க்கரை வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எனவே வரும் ஆண்டிலாவது பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெல்லம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சுவெல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story