பண்ருட்டியில்: போலீஸ் போல் நடித்து விவசாயியிடம் ரூ.65 ஆயிரம் அபேஸ் - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
பண்ருட்டியில் விவசாயியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.65 ஆயிரத்தை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேல்(வயது 68), விவசாயி. இவர் நேற்று முன்தினம் பண்ருட்டி-குமளங்குளம் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.85 ஆயிரத்தை எடுத்து பையில் வைத்துக்கொண்டு அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்றுகொண்டிருந்த 2 பேர், சிங்காரவேலுவை மறித்தனர். பின்னர் அவர்கள் நாங்கள் பறக்கும்படை போலீஸ் அதிகாரிகள் என்று கூறியதோடு, உங்கள் பையில் கஞ்சா இருக்கிறதா? என சோதனை செய்ய வேண்டும் என்றனர்.
இதில் பயந்துபோன சிங்காரவேல் உடனே தான் வைத்திருந்த பணப்பையை அவர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் சோதனை செய்வது போல் நடித்துவிட்டு அந்த பணப்பையை சிங்காரவேலுவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவானார்கள்.
சிறிது தூரம் நடந்து சென்ற சிங்காரவேலு திடீரென சந்தேகமடைந்து, பையில் இருந்த பணத்தை பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.65 ஆயிரத்தை காணவில்லை. அதன்பிறகு தான் வந்தவர்கள் போலீஸ் போல நடித்து பணத்தை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் சிங்காரவேலு கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் ரூ.65 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story