அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறக்க தடை


அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறக்க தடை
x
தினத்தந்தி 13 Dec 2018 10:15 PM GMT (Updated: 13 Dec 2018 6:16 PM GMT)

சின்னமனூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தமபாளையம்,

சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டிடத்தின் பின்புறத்தில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் கடந்த 2014-ம் ஆண்டு திருமண மண்டபம் கட்டும் பணியை தொடங்கினர். அந்த மண்டபம் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பேரூராட்சி நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடையே திருமண மண்டபம் கட்டப்பட்ட இடத்துக்கு பட்டா வழங்கக்கோரி, அந்த சமூகத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தநிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து, இன்று (வெள்ளிக்கிழமை) மண்டபம் திறப்பதாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதனுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-கலெக்டர் வைத்திநாதன், மண்டபம் கட்டிய சமூகத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மண்டபம் குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்றும், அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட மண்டபத்தை திறக்க கூடாது என்று கூறினார்.

இதற்கிடையே உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி நேற்று முன்தினம் மாலை ஓடைப்பட்டி வந்தார். திருமண மண்டபம் கட்டிய குறிப்பிட்ட சமூக நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எக்காரணம் கொண்டும் திருமண மண்டபத்தை திறக்கக்கூடாது என்றும், அதனை மீறி திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இதன் எதிரொலியாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் திருமண மண்டபம் மற்றும் அந்த பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசு புறம்போக்கு நிலத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு அரசு நிர்ணயம் செய்யும் பணத்தை கட்ட வேண்டும். அதன்பிறகு மண்டபத்தை திறக்கலாமா? அல்லது தடை செய்யலாமா? என்பதை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும் என்றார்.

Next Story