நலவாழ்வு முகாமுக்கு சென்ற பழனி கோவில் யானை கஸ்தூரி: சிறப்பு பூஜைகள் செய்து லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது
மேட்டுப்பாளையம் அருகே இன்று தொடங்கும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக பழனி கோவில் யானை கஸ்தூரி நேற்று லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
பழனி,
தமிழக கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு ஆண்டு தோறும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்படும். கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றுப்படுகையில் இந்த முகாம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
அதையொட்டி பழனி முருகன் கோவில் யானை கஸ்தூரி நேற்று லாரி மூலம் மேட்டுப்பாளையத்துக்கு பயணமானது. முன்னதாக காலை 9.30 மணிக்கு மேல் பழனி காரமடையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான தோட்டத்தில், யானைக்கு உணவு வழங்கப்பட்டது. அதையடுத்து பழனி முருகன் கோவில் குருக்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், யானைக்கு பிரசாதம் வழங்கினார்.
அதன் பின்னர் கோவில் யானை கஸ்தூரியை லாரியில் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கடந்த சில நாட்களாக, யானைக்கு லாரியில் ஏறி இறங்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அதனால் யானை எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக லாரியில் ஏறியது.
அதன் பின்னர் லாரி முன்பு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து கோவில் இணை ஆணையர் கொடியசைத்து வழியனுப்ப, லாரி அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது.
லாரி பயணத்தின்போது கோவில் யானை கஸ்தூரிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக யானையை சுற்றிலும், துணிகளால் சுற்றப்பட்ட கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. மேலும் யானை சாப்பிடுவதற்காக புற்கள், பழங்கள் அதன் துதிக்கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கூறியதாவது:-
கோவில் யானை கஸ்தூரிக்கு 53 வயது ஆகிறது. அதன் எடை 4 ஆயிரத்து 790 கிலோ ஆகும். பழனி கோவிலில் இருந்து 12-வது ஆண்டாக நலவாழ்வு முகாமுக்கு யானை அனுப்பப்படுகிறது. இந்த நலவாழ்வு முகாம் நாளை (அதாவது இன்று) தொடங்கி அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந்தேதி வரை நடக்கிறது. அதன் பின்னர் மீண்டும் பழனிக்கு கஸ்தூரி திரும்பி விடும். நலவாழ்வு முகாமுக்கு செல்வதால் தைப்பூச திருவிழாவில் கஸ்தூரி பங்கேற்காது. முகாமில் கஸ்தூரிக்கு சத்தான உணவு, மருந்துகள் கொடுக்கப்படுவதுடன் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும்.
கஸ்தூரிக்கு பாகன்களாக பிரசாந்த், குட்டன், சந்திரசேகர் ஆகியோர் சென்றுள்ளனர். முகாம் நடைபெறும் இடத்தை கஸ்தூரி அடையும் வரை லாரியை பின்தொடர்ந்து ஒரு வாகனத்தில் கால்நடை டாக்டர் முருகன், உதவியாளர் செந்தில்குமார், கோவில் கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் செல்வார்கள். கஸ்தூரியை முகாம் நடத்துபவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் திரும்பி விடுவார்கள். முன்னதாக கால்நடை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கஸ்தூரியின் உடல்நலம் குறித்து டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்பது தெரிந்த பின்னரே முகாமுக்கு கஸ்தூரி அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story