மேட்டுப்பாளையத்தில்: யானைகள் நலவாழ்வு முகாம் இன்று தொடங்குகிறது
மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
மேட்டுப்பாளையம்,
தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 4 ஆண்டுகளும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 6 ஆண்டுகளும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 11-வது ஆண்டாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணி வரை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
யானைகள் முகாமிற்காக 6 ஏக்கர் நிலப்பரப்பில் அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு தனித்தனியாக மருத்துவ கொட்டகை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. யானைகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக ¾ கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. யானைகளை குளிக்க வைப்பதற்காக குளியல் ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முகாமைச்சுற்றிலும் வனப் பகுதியையொட்டி 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் முகாமிற்குள் காட்டு யானைகள் புகுந்து விடுவதை தடுக்க முகாமை சுற்றிலும் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு சூரியமின்வேலி, சீரியல் லைட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 14 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இரவு நேரத்திலும் ஒளி விட்டு பிரகாசிக்க சக்தி வாய்ந்த மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
யானைகள் நலவாழ்வு முகாம் இன்று தொடங்குவதையொட்டி நேற்று காலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்து கோவில் மற்றும் மடத்தை சேர்ந்த யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக முகாமிற்கு வரத்தொடங்கின.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவில் யானை அபயாம்பிகை நேற்று காலை 7 மணிக்கு லாரியில் மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த யானை, சாய்வுதள மேடை வழியாக லாரியில் இருந்து பத்திரமாக இறங்கியது. அதைத்தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்யானை அபிராமி கும்பகோணம் உப்பிலியப்பன்கோவில் யானை பூமா ஆகிய யானைகள் வந்தன. லாரியில் இருந்து இறங்கிய யானைகள் கோவில் முன்புறமுள்ள கொடி மரம் அருகே சென்று துதிக்கையை தூக்கி அம்மனை வழிபட்டன. அதன்பின்னர் யானைகள் முகாமிற்கு சென்றன.
முகாமிற்கு வந்த யானைகள் உற்சாக மிகுதியால் துதிக்கையால் மண்ணை தனது உடல்மீது வாரி இறைத்தன. ஓராண்டுக்குப்பின்னர் சந்தித்த மகிழ்ச்சியில் யானைகள் ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி மகிழ்ந்து விளையாடின. முகாமிற்கு யானைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. யானைகள் வரும் வழியில் பொது மக்கள் கூட்டம், கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.
மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோவில் யானை அபயாம்பிகை முகாமில் ஷவர் மேடையில் அமைக் கப்பட்டிருந்த குழாயில் ஆசைதீர தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்து கொண்டது. களைப்பில் ஸ்ரீ பெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் கோவில் யானை கோதை கீழே படுத்து உறங்கியது.
மேலும் ஓராண்டுக்குபின் முகாமில் சந்தித்து கொண்ட மகிழ்ச்சியில் பேரூர் பட்டீசுவரர் கோவில் யானை கல்யாணியும், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் யானை ராமலட்சுமியும் துதிக்கையால் தழுவி விளையாடி மகிழ்ந்தன.
முகாம் ஒருங்கிணைப்பாளரும், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருமான க.ராஜமாணிக்கம், துணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர்கள் ராமு, நந்தகுமார், உதவி கோட்ட பொறியாளர் பிரேம்குமார் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் முகாமுக்கு வந்த யானைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை தலைமை இடத்து இணை ஆணையர் ஹரிப்பிரியா, இணை ஆணையர் அசோக் ஆகியோர் முகாமை சுற்றி பார்வையிட்டனர். இந்த ஆண்டு முகாமில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கபட்டு உள்ளது.
முகாமில் கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 29 யானைகள் கலந்து கொள்கின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் யானைகள் முகாமுக்கு செல்வதற்கு முன்னதாக மேட்டுப் பாளையம் அன்னூர் ரோடு, காரமடை நால்ரோடு பிரிவில் உள்ள தனியார் எடை மேடையில் எடை பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story