சேலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வெள்ளிப்பட்டறை அதிபர் கைது - கோவிலில் தாலிகட்டியதால் பெற்றோர் அதிர்ச்சி


சேலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வெள்ளிப்பட்டறை அதிபர் கைது - கோவிலில் தாலிகட்டியதால் பெற்றோர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 13 Dec 2018 10:15 PM GMT (Updated: 13 Dec 2018 11:15 PM GMT)

சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெள்ளிப்பட்டறை அதிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவர் சிறுமியை மிரட்டி கோவிலில் திருமணம் செய்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம், 

சேலம் செவ்வாய்பேட்டை தொழுவர்நந்தவனம் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 47). அவர் தனது வீட்டிலேயே வெள்ளிப்பட்டறை வைத்து, கொலுசுகளுக்கு சலங்கை செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் கடந்த ஒரு ஆண்டாக கூலி தொழிலாளி ஒருவரின் மகளான 16 வயது சிறுமி வேலை பார்த்து வந்தாள்.

இந்த நிலையில் சிறுமியின் ஏழ்மையை தெரிந்து கொண்ட சரவணன் 2 மாதத்திற்கு முன்பு அவளிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் இதனை அவரது செல்போனில் படம் பிடித்து அதை காண்பித்து சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை சிறுமி வழக்கம் போல் வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்றார். அப்போது சரவணன், அவரை கோவிலுக்கு அழைத்து சென்றார். பின்னர் ஏற்கனவே தயாராக வைத்து இருந்த தாலியை எடுத்து சிறுமியின் கழுத்தில் திடீரென்று கட்டி உள்ளார். இதனால் சிறுமி கதறி அழுதாள். அப்போது சிறுமியை மீண்டும் சரவணன் மிரட்டி உள்ளார்.

இந்த நிலையில் சரவணன் தன்னை மிரட்டி தனது கழுத்தில் தாலி கட்டி விட்டார் என்று பெற்றோர் மற்றும் உறவினரிடம் கூறி சிறுமி அழுது உள்ளாள். இதனால் அவளது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அவளது கழுத்தில் தாலி கட்டிய வெள்ளிபட்டறை அதிபர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் சேலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமலதா வழக்குப்பதிவு செய்து சரவணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். கைது செய்யப்பட்ட சரவணனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து இருக்கிறாள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக வெள்ளிப்பட்டறையில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். அவளது ஏழ்மையை பயன்படுத்தி ஆசைவார்த்தை கூறி சரவணன் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார் என்று தெரிவித்தனர்.

Next Story