ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம நிர்வாக அதிகாரிகள் 146 பேர் கைது


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம நிர்வாக அதிகாரிகள் 146 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 21 Dec 2018 4:59 PM GMT)

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம நிர்வாக அதிகாரிகள் 146 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு, 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகள் பதவியை மீண்டும் தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும். கணினி வசதி செய்து கொடுக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களுக்கு கழிப்பறை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 12-வது நாளாக நீடித்தது. மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21-ந்தேதி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் ஈரோடு சம்பத்நகர் பகுதியில் நேற்று ஒன்று திரண்டனர். போராட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மேற்கு மண்டல செயலாளர் கந்தசாமி, ஈரோடு வட்ட தலைவர் ஜான், செயலாளர் பழனிவேல், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியபடி சம்பத்நகரில் இருந்து ஊர்வலமாக சென்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.

36 பெண்கள் உள்பட மொத்தம் 146 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லபட்டு தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story