வந்தவாசியில் கோஷ்டி மோதல்; 15 பேர் கைது
வந்தவாசி கோஷ்டி மோதல் சம்பவத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை தனது மகன் முருகனுடன் (40) மோட்டார் சைக்கிளில் வந்தவாசி 5 கண் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தவாசி குளத்துமேட்டு பகுதியைச் சேர்ந்த வாசிம் (20) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதில் முனியன் காயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் வந்தவாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய வாலிபரை முருகனும் அவருடைய உறவினர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வாசிம் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து அங்கிருந்த முருகனை தாக்கினர். மேலும் அதனை தடுக்க வந்த முனியனையும் தாக்கினர். இதில் முருகனுக்கு 4 பற்கள் உடைந்தது. காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து வாசிம் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி முனியனின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு 5 கண்பாலம் அருகில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து வந்தவாசி தெற்கு போலீசில் முருகன் அளித்த புகாரின் பேரில் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அதில் 14 பேரையும், ரபீக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் ஒருவரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஒரு தரப்பினரை மட்டும் அதிகளவில் கைது செய்ததை கண்டித்து குளத்து மேட்டுப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்தவாசி 5 முனை சாலை சந்திப்பில் நேற்று காலை மற்றும் மாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து வந்தவாசி வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரவேஷ்குமாரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சந்தித்து, ஒரு தரப்பினரை மட்டும் அதிகளவில் கைது செய்து இருப்பதை கண்டித்து மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story