கவர்னரின் முடிவை எதிர்பார்த்து ஏமாற்றம்: நளினி- முருகன் விடுதலைக்கு கோர்ட்டை அணுகுவோம் வக்கீல் புகழேந்தி பேட்டி


கவர்னரின் முடிவை எதிர்பார்த்து ஏமாற்றம்: நளினி- முருகன் விடுதலைக்கு கோர்ட்டை அணுகுவோம் வக்கீல் புகழேந்தி பேட்டி
x
தினத்தந்தி 9 Jan 2019 3:30 AM IST (Updated: 9 Jan 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை குறித்து கவர்னரின் முடிவை எதிர்பார்த்து நளினியும், முருகனும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் பொங்கலுக்கு பிறகு கோர்ட்டை அணுக இருக்கிறோம் என்று வக்கீல் புகழேந்தி கூறினார்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவருடைய கணவர் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்பட 7 பேரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துவிட்டதால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது. இதனால் நளினி-முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழக கவர்னருக்கு அனுப்பி வைத்தது.

தீர்மானம் அனுப்பி 4 மாதங்களாகியும் இதுவரை 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நளினியின் வக்கீல் புகழேந்தி நேற்று வேலூர் மத்திய சிறையில் நளினி மற்றும் முருகனை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் அளித்து 4 மாதங்களாக நிலுவையில் உள்ளது. தங்கள் விடுதலையை எதிர்பார்த்து, எதிர்பார்த்து காத்திருந்து நளினியும், முருகனும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழக அரசின் தீர்மானத்தை கவர்னர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

ஆனால் தற்போது அவர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் சோர்வடைந்துவிட்டனர். எனவே இவர்கள் விடுதலை தொடர்பாக பொங்கலுக்கு பிறகு சென்னை ஐகோர்ட்டை அணுக உள்ளோம். நிரந்தர பரோல் கேட்டு மனுத்தாக்கல் செய்வோம். வேறுவழியில் விடுதலை செய்ய தமிழக அரசையும் அணுகுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story