தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் குமரி அனந்தன் வலியுறுத்தல்


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் குமரி அனந்தன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:45 AM IST (Updated: 10 Jan 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று குமரி அனந்தன் வலியுறுத்தி உள்ளார்.

நெல்லை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் சோமையாஜூலு ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை சென்றவர். காந்தியின் கொள்கையில் ஈர்ப்பு கொண்டவர். அவர் கள்ளுக்கடைக்கு எதிராக அறிவித்த போராட்டத்தை கோவில்பட்டியில் சோமையாஜூலு நடத்தி காட்டினார். காங்கிரஸ் கட்சிக்கான பிரசாரம் செய்தவர். அவருடைய தியாகத்தை நினைவு கூறும் வகையில் நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும்.

பூரண மதுவிலக்கு காங்கிரஸ் கட்சியின் தலையாகிய கொள்கை. இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி சில இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

இந்த ஆட்சி மாற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். தேர்தல் மூலம் இதை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள். அனைத்து துறைகளிலும் மோடி அரசு பின் தங்கி விட்டது. வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இந்த நிலை மாற வேண்டும் என்றால், மோடி இடத்துக்கு ராகுல் காந்தி வரவேண்டும். இமயம் முதல் குமரி வரை உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். தமிழகம் வழியாக நீர் வழிபாதை அமைக்க வேண்டும். இதுபோன்று மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் ராகுல்காந்தியால் தான் நிறைவேற்ற முடியும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது. இதற்கான முயற்சியை மாநில அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சோமையாஜூலு உருவப்படம் திறப்பு விழா நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன் (மாநகர் மாவட்டம்), எஸ்.கே.எம்.சிவக்குமார் (கிழக்கு), பழனிநாடார் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக குமரி அனந்தன் கலந்து கொண்டு, உருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்க குமார், பொருளாளர் ராஜேஷ் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story