காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்; 415 பேர் கைது


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்; 415 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 11:15 PM GMT (Updated: 9 Jan 2019 8:29 PM GMT)

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 415 பேர் கைது செய்யப்பட்டனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி படப்பையில் உள்ள மாதா கோவில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டனர்.

இதில் சி.ஜ.டி.யு. காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் முத்துகுமார், சி.ஐ.டி.யு. போக்குவரத்து காஞ்சீபுரம் மண்டல தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் விவசாயிகளை வஞ்சிக்காதே, உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்து, முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடு, பொதுத்துறைகளை பாதுகாத்திடு என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.வி.பாலாஜி தலைமையில் சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உத்திரமேரூர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்க தலைவர் எஸ்.பெருமாள் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொறுப்பாளர்கள் என்.குணா, பி.குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் பாஸ்கரன், விவசாய சங்க வட்ட செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதிபடுத்து, அரிசி, பருப்பு, மண்எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை அனைவருக்கும் வழங்கிடு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட சி.ஐ.டி.யு.வினர் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக தபால் நிலையம் எதிரே காந்திசாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட சி.ஐ.டி.யு.வை சேர்ந்த 105 பேரை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் நாகூர்கனி, ஜெயபால், கஜேந்திரன், தயாளன், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரளான தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான உழவர் சந்தை பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. சாலை மறியலில் ஈடுபட்டதாக 40 பெண்கள் உட்பட 160 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story