மதுரவாயலில் சங்கிலி, செல்போன் பறிப்பு; 3 வாலிபர்கள் கைது
சென்னை மதுரவாயல் பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் சங்கிலி, செல்போன் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை மதுரவாயல் பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து சங்கிலி, செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதையடுத்து மதுரவாயல் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ஆலப்பாக்கத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், மதுரவாயலை சேர்ந்த ரமேஷ் (வயது 20), அஜித் (22), திருவேற்காட்டை சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பதும், இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன், நகை போன்றவற்றை பறித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 4 பவுன் தங்க நகைகள், 3 செல்போன்கள், ஒரு மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.