ரேஷன் கடை முன்பு பொது மக்கள் முற்றுகை போராட்டம்
அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ரேஷன் கடை முன்பு பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
சேலம்,
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சேலம் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வறுமை கோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட்டு நேற்று தடை விதித்தது.
இந்த நிலையில் சேலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று காலையிலேயே பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் ஊழியர்கள் டோக்கனை பெற்றுக்கொண்டு பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கினர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க கோர்ட்டு தடை விதித்து உள்ளது என்ற செய்தி மக்களிடையே பரவியது. இதையொட்டி சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, ‘அனைவரும் ஓட்டுப்போட்டு உள்ளோம். எனவே ஒரு தரப்பினருக்கு மட்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் ’என்றனர். இதையொட்டி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சம்பவ இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story