முன் அறிவிப்பின்றி செண்பகத்தோப்பு அணையில் இருந்து நள்ளிரவில் தண்ணீர் திறப்பு பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது


முன் அறிவிப்பின்றி செண்பகத்தோப்பு அணையில் இருந்து நள்ளிரவில் தண்ணீர் திறப்பு பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது
x
தினத்தந்தி 11 Jan 2019 3:45 AM IST (Updated: 10 Jan 2019 9:13 PM IST)
t-max-icont-min-icon

செண்பகத்தோப்பு அணையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பால் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட செண்பகத்தோப்பு அணை இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்த நிலையில் கடந்த 8–ந் தேதி நள்ளிரவு பொதுப்பணித்துறையினர் எவ்வித முன்னறிவிப்புமின்றி அணையில இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.

இதனால் கமண்டல நதியில் வீணாக தண்ணீர் செல்கிறது. செண்பகத்தோப்பு அணையிலிருந்து குடிநீர் வசதி பெற்று வரும் சுமார் 10–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படையும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இது குறித்து படவேடு பகுதியை சேர்ந்த அமுல்ராஜ் என்பவர் கூறுகையில், சென்ற ஆண்டு இந்த அணையில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து பிடித்து விற்பனை செய்ய செங்கம் பகுதியை சேர்ந்த பருவத மீனவ சங்கத்தினருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் விவசாய உற்பத்தி நடைபெறும் காலத்தில் மீன் பிடிப்பிற்காக அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடக்கூடாது என்றும், ஒரு வேளை வேறு காலங்களில் தண்ணீர் திறந்தாலும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதையும் மீறி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென கமண்டல ஆற்றில் சுமார் இடுப்பளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அணையில் உள்ள நீரை நம்பியே இந்த ஆண்டில் இனிவரும் காலங்களில் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது என்றார்.


Next Story