ஊட்டியில் வரத்து குறைவு, தக்காளி விலை கிடு, கிடு உயர்வு - கிலோ ரூ.60-க்கு விற்பனை


ஊட்டியில் வரத்து குறைவு, தக்காளி விலை கிடு, கிடு உயர்வு - கிலோ ரூ.60-க்கு விற்பனை
x
தினத்தந்தி 10 Jan 2019 11:00 PM GMT (Updated: 10 Jan 2019 6:01 PM GMT)

வரத்து குறைவு காரணமாக ஊட்டியில் தக்காளி விலை கிடு, கிடு என உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி,

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிப்பிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. குளிர் பிரதேசத்தில் இந்த காய்கறிகள் அதிக விளைச்சலை தருவதால், அதனை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மலைக்காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட் மற்றும் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தக்காளி, கத்தரிக்காய், புடலங்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் சமவெளிப்பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த காய்கறிகள் சமையலில் முக்கிய இடம் வகிக்கிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் தங்களது வீட்டிற்கு தேவையான காய்கறிகளை குறிப்பிட்ட இடைவெளியில் ஊட்டிக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

தற்போது ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் நாட்டு தக்காளி மற்றும் ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ஒன்றுக்கு நாட்டு தக்காளி ரூ.50, ஆப்பிள் தக்காளி ரூ.60 என விற்பனை ஆனது. ஊட்டியில் திடீரென தக்காளி விலை உயர்ந்து இருப்பதால், மார்க்கெட் கடைகளுக்கு வரும் பெண்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்து உள்ளனர். சிலர் ஆர்வம் காட்டுவது இல்லை. இருமடங்கையும் விட கூடுதலாக விலை உயர்ந்து உள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து கடை வியாபாரி குமார் கூறியதாவது:-

கர்நாடக மாநிலம் குண்டல்பெட், நஞ்சன்கோடு, ஈரோடு மாவட்டம் நாச்சிபாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு தினமும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது பனிக்காலம் என்பதால் தக்காளி சீசன் இல்லை.

இதனால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. அதன் காரணமாக ஊட்டியில் தக்காளி விலை கிடு, கிடு என உயர்ந்து இருக்கிறது. கடந்த வாரம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை உயர்ந்து, தற்போது ரூ.70-க்கு விற்பனை ஆகிறது. ஊட்டி பட்டாணி ஒரு கிலோ ரூ.70, பீட்ரூட் ரூ.35, கேரட் ரூ.25 என விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story