‘உயர்கல்வியில் தமிழகத்துக்கு மதிப்புமிக்க இடம்’ சர்வதேச மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம்
உயர்கல்வியில் தமிழகம் மதிப்புமிக்க இடத்தை பெற்றிருக்கிறது என்று சர்வதேச மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
சென்னை,
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியும், சென்னை வர்த்தக மற்றும் தொழில் சபையும் இணைந்து ‘நிர்வாக மேன்மையில் புதிய உருமாற்றங்கள்’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை நடத்துகின்றன. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தொடங்கியது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-
மதிப்புமிக்க இடம்
சாத்தியக்கூறுகளை பயன்படுத்தி வர்த்தகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. நம்மிடம் இருக்கும் பலத்தை புரிந்துகொண்டு, செயல் திட்டத்தை வகுத்து வெற்றி மற்றும் சிறப்பான இடத்தை பெறவேண்டியது இந்த தருணத்தில் அவசியமானது ஆகும். கல்வி மற்றும் தொழில்முனைவோர் திறன் ஆகியவை தான் நம்முடைய பலம். உலக கல்வி வரைபடத்தில் நாம் முக்கிய இடத்தை வகிக்கிறோம்.
850 பல்கலைக்கழகங்கள், 42 ஆயிரத்து 26 கல்லூரிகள் என உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. நமது நாட்டை பொறுத்தமட்டில் உயர் கல்வியில் தமிழகம் பெரும் மதிப்புமிக்க இடத்தை பெற்றிருக்கிறது. தமிழக பல்கலைக்கழகங்கள் பல்வேறு வகையான பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. பள்ளிகளில் படிப்பு முடித்து உயர்படிப்புக்கு செல்லும் நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த மாணவர்களை விடவும் தமிழகம் 2 மடங்கு அதிகமானவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது.
வலுவான உயர் கல்வி
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு பல்கலைக்கழக கல்வியில் அதிகப்படியான முதலீடுகள் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம். மாநில பல்கலைக்கழகங்களில் 8.86 லட்சம் மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அளப்பரிய கட்டுமானம் மற்றும் மனித வளம் ஆகியவை உயர் கல்வியை இந்தியா மற்றும் தமிழகத்தில் வலுவடையச் செய்துள்ளது.
நமக்கு தற்போது காலம் பிரகாசமாக கனிந்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் முன்னோக்கி நடைபோடவேண்டும். மொத்த உலகமும் நமது மேடை. செழிப்பு மற்றும் வளர்ச்சியடைந்த வேலைவாய்ப்பு என்ற பாதையை நோக்கி நம்முடைய செயல்பாடு இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டோர்
முதல் நாள் மாநாட்டில் எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சந்திராதேவி தணிகாசலம், சென்னை வர்த்தக மற்றும் தொழில் சபை தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி, எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் எஸ்.கோதை, இணை பேராசிரியர் பஞ்சாபி மாலா தேவிதாஸ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story