விருத்தாசலம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை - மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


விருத்தாசலம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை - மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 9:45 PM GMT)

விருத்தாசலம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவரது மனைவி ரேவதி(38). இவர்களுக்கு ஆகாஷ்(18), ஹரிஷ்(11) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த செங்குட்டுவன், அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகள் அபி ஆகியோர் ரேவதியை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.

அப்போது செங்குட்டுவன் ரேவதியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணவேணி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் ரேவதி மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது. அதன் பேரில் போலீசார் நேற்று முன்தினம் காலை ரேவதியின் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வரவேண்டும் என்று கூறிவிட்டு போலீசார் சென்று விட்டனர்.

இதில் மனமுடைந்த ரேவதி, தனது வீட்டின் பின்புறம் சென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் வலியால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

அப்போது அவரிடம் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேவதி, தான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததற்கு செங்குட்டுவன், கிருஷ்ணவேணி, அபி ஆகியோர் தான் காரணம் என வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது. அதன் பேரில் செங்குட்டுவன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி, நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து அறிந்த ரேவதியின் உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ரேவதியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story