கீழக்கரையில் ஆட்டு வியாபாரி வெட்டிக்கொலை - வாலிபர் போலீசில் சரண்


கீழக்கரையில் ஆட்டு வியாபாரி வெட்டிக்கொலை - வாலிபர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 10 Jan 2019 11:45 PM GMT (Updated: 10 Jan 2019 10:09 PM GMT)

கீழக்கரையில் ஆட்டு வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.

கீழக்கரை,

கீழக்கரை தெற்குத்தெரு ஜாமியா நகரை சேர்ந்த ஜகுபர் என்பவரது மகன் லுக்மானுல் ஹக்கீம் (வயது35). இவர் ஆடு வியாபாரம் செய்து வந்தார். இவரது ஆடு ஒன்று காணாமல் போய்விட்டது. இதையடுத்து அந்த ஆட்டை தேடி வந்த லுக்மானுல் ஹக்கீம் தனது நண்பர்களிடம் விசாரித்துள்ளார்.

அப்போது அவர்களிடம் தனது ஆட்டை அதே ஊரைச்சேர்ந்த கட்சி மரைக்காயர் என்பவர் பிடித்து வைத்திருப்பாரோ என பேச்சுவார்த்தையில் கூறினாராம். இதையடுத்து அவரது நண்பர்கள் இதனை கட்சி மரைக்காயரிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கட்சி மரைக்காயர் ஆடு வெட்டும் கத்தியுடன் லுக்மானுல் ஹக்கீம் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த லுக்மானுல் ஹக்கீம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

தகவல் அறிந்ததும் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது ஆஸ்பத்திரி முன்பாக திரண்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும், கீழக்கரையில் கஞ்சா வியாபாரத்தை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதனிடையே கட்சி மரைக்காயர் (32) கீழக்கரை போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சி மரைக்காயர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story