அதிகாரிகள் வாகன சோதனை, வெளிமாநிலங்களுக்கு பட்டாசுகள் ஏற்றி சென்ற 3 லாரிகள் சிக்கின


அதிகாரிகள் வாகன சோதனை, வெளிமாநிலங்களுக்கு பட்டாசுகள் ஏற்றி சென்ற 3 லாரிகள் சிக்கின
x
தினத்தந்தி 10 Jan 2019 10:55 PM GMT (Updated: 10 Jan 2019 10:55 PM GMT)

சிவகாசியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பட்டாசுகளை ஏற்றி சென்ற லாரிகளை அதிகாரிகள் வாகன சோதனையில் கண்டுபிடித்தனர்.

சிவகாசி, 

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவுப்படி பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருட்கள் இல்லாத பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிவகாசியில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன.

பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு தயாரிப்பது கடினம் என்பதால் நேற்று வரை பட்டாசு ஆலைகள் பூட்டியே இருக்கிறது. இதனால் இந்த ஆலைகளில் பணியாற்றி வந்த 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இருந்து பட்டாசுகள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து சிவகாசியில் உள்ள தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை ஆய்வு தனி தாசில்தார் மாரிமுத்து தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு திருத்தங்கல் போலீஸ் செக்போஸ்ட் அருகில் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

அப்போது சிவகாசியில் இருந்து மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பொருட்களை கொண்டு சென்ற லாரிகளில் பட்டாசு பெட்டிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த 3 லாரிகளையும் அதிகாரிகள் சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த லாரிகளை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பு வனத்தை சேர்ந்த பிரேமானந்தம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த பழனிசாமி, தொளூரை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் சிவகாசியில் உள்ள லாரி செட்டுகளில் இருந்து வழக்கமாக வெளி மாநிலங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்வது போல் இந்த பட்டாசு பெட்டிகளையும் அனுப்பி வைத்தனர். நாங்களும் அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் கொண்டு வந்துவிட்டோம். நீங்கள் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறோம் என்றனர். இதை தொடர்ந்து, அவர்களை விளக்கம் பெற்று கொண்டு விடுவிக்கப்பட்டனர்.

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்த பின்னர் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை ஆலையில் இருந்து விற்பனைக்கு வெளியே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு பட்டாசுகள் கொண்டு சென்ற தகவல் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடந்த தீபாவளிக்காக பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் பெரும் அளவில் விற்பனை ஆகாமல் இருந்தது. அதை அவர்கள் கொண்டு சென்று இருக்கலாம். இருந்தாலும் இது தவறு தான். மாவட்ட நிர்வாகத்திடம் உரிய விளக்கம் பெற்று பட்டாசு ஆலைகளில் தற்போது மீதமுள்ள பட்டாசுகளை என்ன செய்வது என்று கேட்டு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மாதம் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு செய்த போது பட்டாசுகள் இருப்பு இல்லை என்ற தகவல் தான் கிடைத்தது. இந்த நிலையில் சிவகாசியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பட்டாசுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது அதிர்ச்சியாக உள்ளது என்றார்.

Next Story