பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 10:40 PM GMT)

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:–

நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இந்த படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதனால் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தது குறித்து மதுரை மாவட்டத்தில் உள்ள 8 தியேட்டர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘சர்கார் சினிமாவுக்கு வசூலித்தது போல ரஜினி நடித்த ‘பேட்ட’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய சினிமாக்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்’’ என்று குற்றச்சாட்டு வைத்தார்.

அப்போது, இந்த படங்கள் மதுரையில் எத்தனை தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, 20–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படங்கள் ஓடுகின்றன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய சினிமாக்கள் திரையிடப்பட்டுள்ள 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழுவில் வருவாய்த்துறை, நகராட்சி அல்லது மாநகராட்சி அதிகாரிகள், வக்கீல் கமி‌ஷனர்கள் தலா ஒரு தியேட்டருக்கு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

இந்தக் குழு மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 17–ந் தேதி வரை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். பின்னர் அந்த குழு தனது அறிக்கையை 18–ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story